Showing posts with label கம்பு. Show all posts
Showing posts with label கம்பு. Show all posts

Monday, August 29, 2016

சத்து மாவு



சத்து மாவு கஞ்சி என் மகள்களுக்கு பிடித்த பானம். ஒரு வயதில்  இருந்து இதை அவர்களுக்கு கொடுத்து கொண்டுயிருக்கிறேன்.  இந்த  சத்து  மாவு எப்படி தயாரிப்பது என்பதை பற்றிய  பதிவு இது.







 இதில் உள்ள தானியங்களை உங்கள் சுவைக்கு ஏற்ற வாறு குறைத்து அல்லது கூட்டி கொள்ளலாம். அணைத்து தானியங்களையும் சுத்தம் செய்து, வெய்யிலில் காயவைத்து, அடி கனமான பாத்திரத்தில் கொஞ்சம்கொஞ்சமாக போட்டு சிறு தீயில் நன்றாக வறுத்து ஆற வைத்து அரைத்தால் சாது மாவு தயார். இதை கொண்டு கஞ்சி. கொழுக்கட்டை, இனிப்பு அடை , புட்டு  என்று நமது தேவைக்கு தக்கவாறு பயன்படுத்தி கொள்ளலாம்.





 சம்பா கோதுமை- 1/2 kg
கம்பு - 1 kg
கேழ்வரகு - 1 kg
வெள்ளை சோளம் - 1/4 kg
சிகப்பு அரிசி / கவுனி அரிசி/ புழுங்கல் அரிசி- 1/4kg
கருப்பு உளுந்து ( உடைத்தது )- 1/4 kg
பார்லி -1/4 kg
நில கடலை - 1/4 kg
பாசி பயிறு -1/4 kg
கொள்ளு - 1/4 kg
பொட்டு கடலை - 100gm
மக்கா சோளம் - 100 gm
முந்திரி - 200 gm
பாதாம் - 200 gm
சுக்கு -100gm
ஏலக்காய் -10gm
கல்உ ப்பு - 1 கை

கல் உப்பையும் வறுத்து கொள்ளவும். சுக்கை தோல் நீக்கி லேசாக தட்டி போடவும் (வறுக்க தேவையில்லை ). தண்ணீர் படாமல் பார்த்து கொண்டால் 6 மாதம் வரை பயன்படுத்தலாம். தானியங்களை முளை  கட்டியும் பயன்படுத்தலாம்.

Tuesday, June 30, 2015

கம்பங்கூழ்



முதல் நாள் இரவு ஊர வைத்த கம்புச்சோறை தேவைக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு உருண்டைகளை எடுத்து ஊர வைத்த தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு கரைத்து குடிக்கலாம். தேவைப்பட்டால் மோர் சேர்த்துக்கொள்ளலாம். தொட்டுக்கொள்ள சின்ன வெங்காயம், மோர் மிளகாய், ஊறுகாய், சுண்ட குழம்பு நன்றாக இருக்கும். சிலர் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கம்பங்கூழ்ழோடு கலந்து குடிப்பார்கள். எனக்கு சின்ன வெங்காயத்தை கடித்துக்கொள்ள பிடிக்கும். 
படத்தில்  கம்பங்கூழ், காலிபிளவர் வறுவல், சின்ன வெங்காயம்

மீதம் இருக்கும் கம்பு உருண்டைகள் முழுகும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் பயன்படுத்தலாம். இரண்டு நாள் வரை வைத்துப்பயன்படுத்தலாம் அதற்கு மேல் ஆனால் புளித்து விடும்.


Wednesday, May 20, 2015

கம்பு சோறு/ கம்பங் களி

படத்தில் : கம்பு சோறு , கத்தரிக்காய், நில கடலை  புளி குழம்பு

வெயில் தொடங்கி விட்டால், வீட்டில் அடிக்கடி  கம்பு சோறு செய்வோம். எனக்கு கம்பு சோறு குழம்பு தொட்டு சாப்பிட பிடிக்கும்.  அம்மா அவர்களது சிறு வயதில் கம்பு, சோளம், நெல் எல்லாம் உரலில் இடித்து சோறு செய்த பழக்கம் உண்டு. கம்பு சோறு செய்வதை பற்றி அம்மா அதிகம் விளக்கங்கள் சொல்லி இருந்தாலும்,இதை செய்ய கற்று கொண்டது அத்தையிடம் தான்.

பழைய முறை படி இதை செய்வது பெரிய வேலை, கம்பை இடித்து, புடைத்து, தோல் நீக்கி, மாவை தனியாகவும், குருணையை தனியாகவும் பிரித்து, தண்ணீரை கொதிக்க வைத்து குருணையை போட்டு, அது முக்கால் பதம் வெந்தவுடன், கம்பு மாவை சேர்த்து வேகவைக்க வேண்டும். ஆனால் இப்போது இடிக்க தேவை இல்லை, grinderஇல் அரைத்து சுலபமாக செய்யலாம்.

தேவை :
கம்பு - 1/4 படி
(இந்த முறை நான் பயன்படுத்தியது  நாட்டு கம்பு.   நாட்டு கம்பு தோல்  நீக்குவது சற்று கடினம். லேசாக தண்ணீர் தெளித்து ஊறவைத்து mixiல் pluse modeல் இரண்டு சுற்று சுற்றினால் தோல் வந்துவிடும். புடைத்து  அல்லது நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும். இது பற்றி இன்னொரு பதிவில்  தெளிவாக சொல்கிறேன்  நாட்டு கம்பு தோல் நீக்கப்பட்டு சில கடைகளில் கிடைக்கிறது. விலை கொஞ்சம் அதிகம். கம்பெனி கம்பு என்றால் அப்படியே பயன் படுத்திகொள்ளலாம் . கல் இருந்தால் அரித்து கொள்ளவும்.)

செய்முறை :

  • கம்பை 2 அல்லது 3 மணி நேரம் ஊறவைத்து கொரகொரப்பாக( ஒன்று இரண்டாக ) அரைத்து கொள்ளவும்.   மாவு பதம், தோசை மாவு  போல் சற்று நீர்த்து இருக்க வேண்டும். 
  • அடி கனமான பாத்திரத்தை(cooker without  lid  அடுப்பில் குறைந்த(medium) தீயில் வைத்து மாவை ஊற்றி கை விடாமல் கிளற வேண்டும் . இன்னொரு அடுப்பில் கொஞ்சம் வெந்நீர் வைக்கவும்.




  • சற்று நேரத்தில் மாவு கெட்டியாக தொடங்கும், அப்போது சிறிது வெந்நீர் சேர்த்து கிளறவும். மீண்டும் மாவு கெட்டியாக தொடங்கும், சிறிது வெந்நீர் சேர்த்து கிளறவும்...வெந்நீர் சேர்க்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். மாவு வேக தேவையான நீர் மட்டும் சேர்த்தால்  போதும். மாவு முழுதாக வேகும் வரை இப்படி செய்யவும் (மாவு ஒரு மாதிரி வெள்ளை நிறத்தில் இருந்து சற்று பள பளப்பாக மாறும். opaque  to  translucent ) 



  • மாவு வெந்தவுடன்  அடுப்பை மிகவும் குறைந்த தீயில் (sim ) வைத்து.மூடி போட்டு, 10 நிமிடம் புழுங்க விடவும். தண்ணீரில் கையை நனைத்து  கொஞ்சம் மாவை எடுத்து உருட்டினால் கையில் ஒட்டாமல் உருட்ட வரவேண்டும். இது தான் சரியான பதம். கம்பு சோறு/ கம்பங் களி இப்போது தயார்.


கம்பங் களியை  சூடாக சாம்பார் / புளி குழம்பு  ஊற்றி சாபிடலாம். குறிப்பாக முருங்கை கீரை குழம்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.



மீதம் இருக்கும் கம்பங் களியை உருண்டைகளாக உருட்டி, உருண்டைகள் முழுகும் வரை சோறு விடித்த கஞ்சி கொஞ்சம் + தண்ணீரில் போட்டு வைத்து மறு நாள்   கம்பங் கூழாக குடிக்கலாம்.  கம்பங் கூழ் அடுத்த பதிவில்... 
  


குறிப்பு :
  • மாவு அரைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஒன்று இரண்டாக அரைத்தால் போதும்.
  • மாவை போல் 3 அல்லது 4 மடங்கு தண்ணீர்( வெந்நீர்) தேவை படும்.
  • 40 or 45 நிமிடம் முழுதாக தேவை படும் இம்முறையில் சமைப்பதற்கு. 






















Related Posts Plugin for WordPress, Blogger...