Monday, August 29, 2016

சத்து மாவுசத்து மாவு கஞ்சி என் மகள்களுக்கு பிடித்த பானம். ஒரு வயதில்  இருந்து இதை அவர்களுக்கு கொடுத்து கொண்டுயிருக்கிறேன்.  இந்த  சத்து  மாவு எப்படி தயாரிப்பது என்பதை பற்றிய  பதிவு இது. இதில் உள்ள தானியங்களை உங்கள் சுவைக்கு ஏற்ற வாறு குறைத்து அல்லது கூட்டி கொள்ளலாம். அணைத்து தானியங்களையும் சுத்தம் செய்து, வெய்யிலில் காயவைத்து, அடி கனமான பாத்திரத்தில் கொஞ்சம்கொஞ்சமாக போட்டு சிறு தீயில் நன்றாக வறுத்து ஆற வைத்து அரைத்தால் சாது மாவு தயார். இதை கொண்டு கஞ்சி. கொழுக்கட்டை, இனிப்பு அடை , புட்டு  என்று நமது தேவைக்கு தக்கவாறு பயன்படுத்தி கொள்ளலாம்.

 சம்பா கோதுமை- 1/2 kg
கம்பு - 1 kg
கேழ்வரகு - 1 kg
வெள்ளை சோளம் - 1/4 kg
சிகப்பு அரிசி / கவுனி அரிசி/ புழுங்கல் அரிசி- 1/4kg
கருப்பு உளுந்து ( உடைத்தது )- 1/4 kg
பார்லி -1/4 kg
நில கடலை - 1/4 kg
பாசி பயிறு -1/4 kg
கொள்ளு - 1/4 kg
பொட்டு கடலை - 100gm
மக்கா சோளம் - 100 gm
முந்திரி - 200 gm
பாதாம் - 200 gm
சுக்கு -100gm
ஏலக்காய் -10gm
கல்உ ப்பு - 1 கை

கல் உப்பையும் வறுத்து கொள்ளவும். சுக்கை தோல் நீக்கி லேசாக தட்டி போடவும் (வறுக்க தேவையில்லை ). தண்ணீர் படாமல் பார்த்து கொண்டால் 6 மாதம் வரை பயன்படுத்தலாம். தானியங்களை முளை  கட்டியும் பயன்படுத்தலாம்.

Thursday, July 14, 2016

தப்பு கொடி (கிரிணி பழம் )...

தப்பு கொடி (கிரிணி பழம் )...


நாம் விதைக்காமல் தானே முளைக்கும் விதைகளை தப்பு  விதை/செடி என்றும், நாம் பறிக்கும் போது தவறவிடும் காய்களை/ பூக்களை தப்பு காய்/பூ என்று எங்கள் ஊரில் அழைப்பார்கள், அதை போன்ற தப்பு செடி இது. குப்பை கலந்து வைத்த பின் நிறைய செடிகள் முளைத்தன. சரி பறித்து இதற்கே குப்பையாக போடலாம் என்று நினைத்த போது இந்த கொடி  பூத்துவிட்டது. அதனால் தப்பி பிழைத்து இரண்டு நாட்களில் காய் பூவும் பூத்தது. காய் முற்றி ,  செடிலியே பழுக்கட்டும் என்று விட்டுவைத்தோம், நேற்று அணிலோ, காகமோ லேசாக கொறித்துள்ளது.பறித்துவிட்டேன் இன்று சாப்பிட்டுவிடுவோம்.  

Wednesday, April 20, 2016

பூக்கள்....

செடிகளில் பூக்கும் பூக்களை   விட பூ பூக்கும் மரங்கள்  என்னை சிறுவயதில் இருந்து மிகவும் கவர்கிறது. மரமல்லி, சரகொன்றை, மகிழம்பூ, செண்பகபூ, நாகலிகம் போன்ற மரங்கள் . அங்கொன்றும்  இங்கொன்றும் இருக்கும் இந்த மரங்களை பார்க்கும் போது சிறு வயதில் நான் பார்த்த மரங்களும், அதை கடக்கும் போது வந்த மணமும் நினைவில் வரும். இப்போது ஊரெங்கும்  கொன்றை பூக்கள் அழகாக பூத்துள்ளது. பள்ளிக்கு நகர பேருந்தில் பயணிக்கும் போது,  ஒரு பேருந்து நிறுத்தத்தில்  இருந்த சரகொன்றை மரத்தில் அதன் அழகிய மஞ்சள் பூக்களை பார்த்தவாறு பயணித்தது   இப்போதும்  மறக்கவில்லை( சில வருடங்களில்  அந்த மரம் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியில் வெட்டப்பட்டது).

ஆனால் இந்த புங்க மரம் பற்றி தெரிந்த போதும், சிகைக்காயில் சேர்க்க அதன் விதைகளை தேடி அலைந்த போதும்,  அதன் பூக்களை கவனித்தது இல்லை . சென்ற வருடம் மார்ச் மாதத்தில் ஒரு நாள், சிக்னலில் காத்துகொண்டு இருந்தபோது தான் இதன் பூக்களை முதன்முதலில் பார்த்தேன். அப்போதும் பூக்களை முதலில் கவனிக்கவில்லை, அதனை சுற்றி பறந்த தேனிகளை தான் பார்த்தேன். இவ்வளவு தேனிகள் ஏன் இங்கு என்று கவனித்தபோது தான் பூக்கள் தெரிந்தன. அடர்த்தியான நிறங்கள் இல்லை  ஆனால் அழகான நிறம், கொத்துத் கொத்தாய் அவ்வளவுப் பூக்கள். அப்போது இருந்து புங்க மரத்தை பார்க்கும்போதேல்லாம் பூக்கள் இருகிறதா என்று கவனிப்பேன். இந்த மாதங்கள் கொன்றை பூக்கள் போலவே புங்கம்பூக்கள் பூக்கும் பருவம் போல், எங்கள் வீட்டு வாசலில் உள்ள மரத்தில்லும் பூ பூத்து உள்ளது. பார்த்து ரசித்து படமெடுத்து, மகளுக்கும் காட்டினேன். தலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றாள், ஒரு சிறிய கொத்து பறித்து அவளுக்கு சூடி அழகும் பார்த்தேன் .


Tuesday, September 29, 2015

இயற்கையில் எந்தனை வண்ணம்இத்தனை  வண்ணத்தில் வெட்டுக்கிளி பார்ப்பது இதுதான் முதல்முறை. பச்சை நிறத்திலும், மர நிறத்திலும் சிலமுறை மஞ்சள் நிறத்தில் சிறிய வெட்டுக்கிளிகளை  மட்டுமே பார்த்திருக்கிறேன். இன்று மகளை
பள்ளியிலிருந்து  அழைத்து வரும்போது பட்டாம்பூச்சிகளை வேடிக்கை பார்த்துகொண்டு வந்தோம், அப்போது இந்த  வெட்டுக்கிளிகள் எருக்கம் பூ செடியில்  இருந்தன. 

Tuesday, June 30, 2015

ஆவாரம் பூவும் கூட்டு பூழுவும்...


ஆவாரம் பூவின் இந்த பொண் மஞ்சள் நிறம் என்னை மிகவும் கவர்ந்த நிறம் , இதே நிறம் கொண்ட சரகொன்றை பூக்களையும் மிகவும் பிடிக்கும்.
தை மாதத்தில் இந்த பூக்கள் பூக்க தொடங்கும் என்று நினைகிறேன். தை பொங்கல் அன்று ஆவாரம் பூ , கூழை பூ, வேப்பிலை மூற்றையும் வாசல் படியில் கட்டுவோம்.

எங்கள் ஊரில் ஐயன் வாய்கால் கரையில் இந்த பூக்கள் நிறைய இருந்தாலும் பறிக்க சந்தர்ப்பம் அமைந்தது இல்லை.குளியல் பொடிக்கு தேவையான பூக்களை நாட்டு மருந்து கடையில் வாங்கிகொள்வோம்.  

இந்த முறை ஊரில் இருந்து வரும் போது  வழியில் இந்த பூக்களை பார்த்தேன்.  ''ஆவாரை பூத்திருக்க சாவாரை பார்த்து உண்டா''  என்று எங்கள் அம்மச்சி சொல்வார்கள். சரி சில பூக்கள் பறித்து கொள்வோம். தேநீர் போட்டு குடித்து பார்க்கலாம்( தொலைக் காட்சியில் ஒருத்தர் சாம்பார் கூட வைத்தார்)  என்று பறிக்க தொடங்கினேன். அப்போது அம்மா " நாங்கள்யெல்லாம் ஆற்றில் குளிக்கும் போது ஆவாரம் இலைகளை கல்லில் அரைத்து தலைக்கு குளிப்போம் " என்று  சொன்னது  ஞாபகம் வந்தது. பூக்களாக பறிக்கவும் நேரம் எடுத்து,எனவே கொஞ்சம் இலைகளோடு பறித்து கொண்டேன்.


வீட்டிற்கு வந்து பூக்களை பறித்த போது, இந்த கூட்டு புழு இருந்தது. இதை போன்ற கூட்டு புழுக்களை அம்மா வீட்டில் பார்திருக்கிறேன். வெளி திண்ணை சுவற்றில் இருக்கும். அங்கு மிதியடியில் இருக்கும் தென்னை நரைக்கொண்டு கூடூ அமைத்து இருக்கும்.இதை பார்த்த போது இந்த பூச்சி அதன் சுற்றுபுறத்தில் இருக்கும் பொருள்களை கொண்டு கூடு அமைக்கிறது என்று புரிந்தது. இது இவை உயிர் பிழைக்க கடைபிடிக்கும் உத்தி என்று நினைக்கிறேன். இயற்கையின் சிறந்த படைப்புக்களில் இதுவும் ஒன்று. இந்த கூட்டு புழுக்களை மட்டும் தான் பார்திருக்கிறேன் , இது என்ன பூச்சியாக மாறும் என்று எனக்கு தெரியாது. இந்த புழுவை இங்கு விட்டால் பிழைக்குமா என்றும்  தெரியவில்லை.

 ஆவாரம் பூதேநீர் அடுத்த பதிவில்...

கம்பங்கூழ்முதல் நாள் இரவு ஊர வைத்த கம்புச்சோறை தேவைக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு உருண்டைகளை எடுத்து ஊர வைத்த தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு கரைத்து குடிக்கலாம். தேவைப்பட்டால் மோர் சேர்த்துக்கொள்ளலாம். தொட்டுக்கொள்ள சின்ன வெங்காயம், மோர் மிளகாய், ஊறுகாய், சுண்ட குழம்பு நன்றாக இருக்கும். சிலர் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கம்பங்கூழ்ழோடு கலந்து குடிப்பார்கள். எனக்கு சின்ன வெங்காயத்தை கடித்துக்கொள்ள பிடிக்கும். 
படத்தில்  கம்பங்கூழ், காலிபிளவர் வறுவல், சின்ன வெங்காயம்

மீதம் இருக்கும் கம்பு உருண்டைகள் முழுகும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் பயன்படுத்தலாம். இரண்டு நாள் வரை வைத்துப்பயன்படுத்தலாம் அதற்கு மேல் ஆனால் புளித்து விடும்.


Wednesday, May 20, 2015

கம்பு சோறு/ கம்பங் களி

படத்தில் : கம்பு சோறு , கத்தரிக்காய், நில கடலை  புளி குழம்பு

வெயில் தொடங்கி விட்டால், வீட்டில் அடிக்கடி  கம்பு சோறு செய்வோம். எனக்கு கம்பு சோறு குழம்பு தொட்டு சாப்பிட பிடிக்கும்.  அம்மா அவர்களது சிறு வயதில் கம்பு, சோளம், நெல் எல்லாம் உரலில் இடித்து சோறு செய்த பழக்கம் உண்டு. கம்பு சோறு செய்வதை பற்றி அம்மா அதிகம் விளக்கங்கள் சொல்லி இருந்தாலும்,இதை செய்ய கற்று கொண்டது அத்தையிடம் தான்.

பழைய முறை படி இதை செய்வது பெரிய வேலை, கம்பை இடித்து, புடைத்து, தோல் நீக்கி, மாவை தனியாகவும், குருணையை தனியாகவும் பிரித்து, தண்ணீரை கொதிக்க வைத்து குருணையை போட்டு, அது முக்கால் பதம் வெந்தவுடன், கம்பு மாவை சேர்த்து வேகவைக்க வேண்டும். ஆனால் இப்போது இடிக்க தேவை இல்லை, grinderஇல் அரைத்து சுலபமாக செய்யலாம்.

தேவை :
கம்பு - 1/4 படி
(இந்த முறை நான் பயன்படுத்தியது  நாட்டு கம்பு.   நாட்டு கம்பு தோல்  நீக்குவது சற்று கடினம். லேசாக தண்ணீர் தெளித்து ஊறவைத்து mixiல் pluse modeல் இரண்டு சுற்று சுற்றினால் தோல் வந்துவிடும். புடைத்து  அல்லது நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும். இது பற்றி இன்னொரு பதிவில்  தெளிவாக சொல்கிறேன்  நாட்டு கம்பு தோல் நீக்கப்பட்டு சில கடைகளில் கிடைக்கிறது. விலை கொஞ்சம் அதிகம். கம்பெனி கம்பு என்றால் அப்படியே பயன் படுத்திகொள்ளலாம் . கல் இருந்தால் அரித்து கொள்ளவும்.)

செய்முறை :

  • கம்பை 2 அல்லது 3 மணி நேரம் ஊறவைத்து கொரகொரப்பாக( ஒன்று இரண்டாக ) அரைத்து கொள்ளவும்.   மாவு பதம், தோசை மாவு  போல் சற்று நீர்த்து இருக்க வேண்டும். 
  • அடி கனமான பாத்திரத்தை(cooker without  lid  அடுப்பில் குறைந்த(medium) தீயில் வைத்து மாவை ஊற்றி கை விடாமல் கிளற வேண்டும் . இன்னொரு அடுப்பில் கொஞ்சம் வெந்நீர் வைக்கவும்.
  • சற்று நேரத்தில் மாவு கெட்டியாக தொடங்கும், அப்போது சிறிது வெந்நீர் சேர்த்து கிளறவும். மீண்டும் மாவு கெட்டியாக தொடங்கும், சிறிது வெந்நீர் சேர்த்து கிளறவும்...வெந்நீர் சேர்க்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். மாவு வேக தேவையான நீர் மட்டும் சேர்த்தால்  போதும். மாவு முழுதாக வேகும் வரை இப்படி செய்யவும் (மாவு ஒரு மாதிரி வெள்ளை நிறத்தில் இருந்து சற்று பள பளப்பாக மாறும். opaque  to  translucent )   • மாவு வெந்தவுடன்  அடுப்பை மிகவும் குறைந்த தீயில் (sim ) வைத்து.மூடி போட்டு, 10 நிமிடம் புழுங்க விடவும். தண்ணீரில் கையை நனைத்து  கொஞ்சம் மாவை எடுத்து உருட்டினால் கையில் ஒட்டாமல் உருட்ட வரவேண்டும். இது தான் சரியான பதம். கம்பு சோறு/ கம்பங் களி இப்போது தயார்.


கம்பங் களியை  சூடாக சாம்பார் / புளி குழம்பு  ஊற்றி சாபிடலாம். குறிப்பாக முருங்கை கீரை குழம்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.மீதம் இருக்கும் கம்பங் களியை உருண்டைகளாக உருட்டி, உருண்டைகள் முழுகும் வரை சோறு விடித்த கஞ்சி கொஞ்சம் + தண்ணீரில் போட்டு வைத்து மறு நாள்   கம்பங் கூழாக குடிக்கலாம்.  கம்பங் கூழ் அடுத்த பதிவில்... 
  


குறிப்பு :
  • மாவு அரைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஒன்று இரண்டாக அரைத்தால் போதும்.
  • மாவை போல் 3 அல்லது 4 மடங்கு தண்ணீர்( வெந்நீர்) தேவை படும்.
  • 40 or 45 நிமிடம் முழுதாக தேவை படும் இம்முறையில் சமைப்பதற்கு. 


Related Posts Plugin for WordPress, Blogger...